கொலை
கொலை

செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் மாணவர் கொலையில் 2 பேர் கைது

செய்துங்கநல்லூர் பாலிடெக்னிக் மாணவர் கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சந்தையடியூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன், வேன் டிரைவர். இவருடைய மனைவி பொன்ராணி. இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன்கள் அபிமன்யு என்ற திலீப் (வயது 19), கண்ணன் (16), மகள் வளர்மதி (17). அபிமன்யு செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள பள்ளியில் கண்ணன் பிளஸ்-1 வகுப்பும், வளர்மதி பிளஸ்-2 வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலையில் அபிமன்யு வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதற்காக, தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சென்றபோது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து வழிமறித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அபிமன்யு தனது மோட்டார் சைக்கிளை திருப்பி கல்லூரிக்கு செல்ல முயன்றார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் அவரை விரட்டி சென்று அரிவாளால் வெட்டினர். இதையடுத்து அபிமன்யு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓடினார். ஆனாலும் மர்மநபர்கள் ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலையில் பலத்த அரிவாள் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்று விட்டனர்.

பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் செய்துங்கநல்லூர் ரெயில் நிலையம் உள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அபிமன்யுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சந்தையடியூரில் உள்ள கோவிலில் வரவு-செலவு கணக்கு கேட்டது தொடர்பாக, அபிமன்யுவின் தாத்தாவான ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் காளிதாசனுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவரது தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜை சிலர் அரிவாளால் வெட்டினர். இந்த வழக்கில் அபிமன்யு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அபிமன்யுவை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தலைமறைவான காமராஜின் சகோதரர் குமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய ஆனந்தராஜ் (எ) காமராஜ், குமார் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையில் தொடர்புடைய தப்பியோடிய ஆண்ட்ரூ உள்ளிட்டவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com