

நாகர்கோவில்:
மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறையில் அரசு ஆதிதிராவிடர் விடுதி உள்ளது.
இந்த விடுதியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இவர்களை கண்காணிக்க விடுதி காப்பாளரும், சமையல் செய்யும் பணியாளர்களும் உள்ளனர்.
விடுதியில் தங்கி உள்ள சில மாணவர்களிடம் சமையல் பணியாளர் மற்றும் உதவியாளர் தகாத முறையில் நடந்து கொள்வதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் விடுதி மாணவர் ஒருவர் படுகாயங்களுடன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அவரிடம் காயத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, விடுதியில் சமையல் வேலை பார்த்தவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு உடன்பட மறுத்ததால் அவர், தாக்கியதாகவும் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இத்தகவலை குழந்தைகள் நலவாரிய அதிகாரிகளுக்கும், ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித் தனர்.
உடனே ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ரமேஷ் மற்றும் குழந்தைகள் நலவாரிய அதிகாரிகள் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவர்களுக்கு சமையல் பணியாளரும், அவரது உதவியாளரும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
அதிகாரிகளின் விசாரணை விவரங்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழித்துறை அரசு ஆதிதிராவிடர் விடுதியின் சமையல் பணியாளர் விஸ்வாம்பரன் (வயது 45), சமையல் உதவியாளர் வில்சன் (52) ஆகியோரை சஸ்பெண்டு செய்தனர்.
மேலும் இவர்கள் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது.
மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் விசாரணை நடத்தி அரசு விடுதியின் சமையல் பணியாளர் விஸ்வாம்பரன், உதவியாளர் வில்சன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 7, 8, 9(1), 9(எல்), 9(எம்), 10, 11(1), 12, 17 மற்றும் 323 உள்பட 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணை தொடங்கியதை அடுத்து விஸ்வாம்பரன், வில்சன் இருவரும் தலைமறைவானார்கள். அவர்களில் விஸ்வாம்பரன் நேற்றிரவு போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தலைமறைவான வில்சனை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விஸ்வாம்பரன் பொன்மனை மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர். வில்சன் மஞ்சாலுமூட்டைச் சேர்ந்தவர்.