

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள மன்குட்டி கிராமத்தல் சத்ரபதி சிவாஜி சிலை இருந்துள்ளது. இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலத்தில் சிவாஜி சிலையை அகற்றப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜனதா சிவாஜி மீதான பக்தி குறித்து அமைதியாக இருப்பது ஏன்? என சிவ சேனாவின் கட்சிப் பத்திரிகையான சாம்னா தனது தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் குறித்து சம்னா தனது தலையங்கத்தில் ‘‘ஆகஸ்ட் ஐந்தாம் தேதி அயோத்தி பூமி பூஜைக்குப்பின் சிவாஜி மன்னர் குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து கூறினார். ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் சிவாஜி சிலை அகற்றப்பட்டுள்ளது. இது பாபர் மசூதியை அகற்றியது போன்றது. பா.ஜனதா மன்னர் சிவாஜி மீது அன்பு வைத்துள்ளோம் என்பது பாசாங்கு.
மத்திய பிரதேச மாநில சிந்த்வாரா மாவட்டத்தில் மார்பளவு சிவாஜி சிலையை நீக்கியபோது அப்போதைய முதல்வர் கமல் நாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் வலியுறுத்தியிருந்தார்.
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. ஒரேநாள் இரவில் சிவாஜி சிலை அகற்றப்பட்டது கவலை அளிக்கிறது. அதைவிட மிகப்பெரிய கவலை மகாராஷ்டிரா பா.ஜனதா அமைதியாக இருப்பது.
காங்கிரஸ் ஆட்சியாக மட்டும் இருந்திருந்தால் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் இப்போது எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்! சிவாஜி மகாராஜா மீதான போலி பக்தியால் என்ன பயன்?.’’ எனக் குறிப்பிட்டுள்ளது.