சட்டசபைக்கு துறை செயலர்கள் காலத்தோடு வர வேண்டும்: சபாநாயகர் அறிவுரை

சட்டசபை கேள்விநேரம் நடக்கும்போது துறையின் செயலர்கள் வளாகத்திற்குள் இருக்க வேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவுறுத்தினார்.
சட்டசபைக்கு துறை செயலர்கள் காலத்தோடு வர வேண்டும்: சபாநாயகர் அறிவுரை
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் சிவா கேள்வி எழுப்பி பேசினார். அப்போது உறுப்பினர் அனந்தராமன் குறுக்கிட்டு பேசியதாவது:-

சட்டசபை கேள்விநேரம் நடக்கும்போது துறையின் செயலர்கள் வளாகத்திற்குள் இருக்க வேண்டும். இயக்குனர்கள் இருக்க வேண்டும். சபை உறுப்பினர்களின் கேள்விக்கு அவர்கள்தான் அமைச்சர்களுக்கு உடனடியாக பதில் தர வேண்டும்.

ஆனால் இங்கு யாரும் நேரத்திற்கு வருவதில்லை. கவர்னர் அழைத்தால் மட்டும் காலை 6 மணிக்கு செல்கின்றனர். இதனால் சபாநாயகர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

இதே கருத்தை வலியுறுத்தி பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திட்டமிட்டு சபையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நமச்சிவாயம், துறை தலைவர்கள் வந்துள்ளனர், செயலர்களும் வந்து விடுவார்கள் என்றார்.

அப்போது சபாநாயகர் வைத்திலிங்கம், அதிகாரிகள் அனைவரும் சபை நடக்கும்போது சரியான நேரத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com