

சென்னை:
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு முடிவு வெளியிட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
பணத்தை பெற்றுக் கொண்டு மதிப்பெண் பெற்றவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்கியதாக திருத்தி இணையதளத்தில் வெளியிட்டு மோசடி செய்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா போலீசில் புகார் செய்தார். அதில், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இடைத்தரகர்கள் இணைய தளத்தில் மதிப்பெண்கள் மோசடி செய்ததாக கூறப்பட்டு இருந்தது.
இதில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேர்வுத்தாள் திருத்தம் செய்த ஊழியர்கள் மதிப்பெண்களை மாற்ற பணம் கொடுத்தவர்கள் உள்ளிட்ட 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முகப்பேரை சேர்ந்த கார் டிரைவர் கணேசன், மதுரவாயலை சேர்ந்த ஷேக் தாவூத், நாலூர், கொளத்தூரை சேர்ந்த ரகுபதி, அயனாவரத்தை சேர்ந்த சுரேஷ்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சின்னச்சாமியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.