

உத்தரபிரதேசம் மாநிலம், கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கும் காரணம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். மேலும் மருத்துவமனை முதல்வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நேற்று கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு சென்று அங்கு நிலவிவரும் சூழ்நிலை தொடர்பாக ஆய்வு செய்தனர்.
அந்த மருத்துவமனைக்கு புதிய முதல்வர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கோரக்பூரில் குழந்தைகளுக்கன நோய் குறியியல்களை கண்டறிய மண்டல அளவில் சிறப்பு மருத்துவ ஆய்வு மையம் அமைப்பதற்காக மத்திய அரசு 85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாரத்துறை மந்திரி நட்டா அறிவித்துள்ளார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூரில் குழந்தைகளுக்கான 70 பச்சிளந் தளிர்கள் பலியான விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையீடு செய்து, தாமாக முன்வந்து விசாரித்து, உரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த மரணங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் கொண்ட அமர்வின் விசாரணைக்கு வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதை கருத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட், இவ்விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதி மன்றத்தை அணுகி தீர்வு காணுமாறு மனுதாரரை கேட்டுக் கொண்டது.