கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு இன்று நேரில் ஆஜராக வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு இன்று மாலை நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை.

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பா.ஜனதா 105, காங்கிரஸ் 78, தேவேகவுடாவின் மதசார் பற்ற ஜனதா தளம் 37, பகுஜன் சமாஜ் 1, கர்நாடகா ஜனதா 1, சுயேட்சைகள் 2 வெற்றி பெற்று இருந்தனர்.

பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தானாக முன் சென்று காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்தது.

இந்த கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் தலைவர்கள் கொடுத்த இடையூறுகளால் குமாரசாமி மிகவும் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் குமாரசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சனிக்கிழமை 13 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி உருவானது.

இதற்கிடையே சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் குமாரசாமிக்கு தெரிவித்த ஆதரவை விலக்கி கொண்டு பா.ஜனதா பக்கம் சாய்ந்தனர். நேற்று சுதாகர், நாகராஜ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் தற்போது 18 எம்.எல். ஏ.க்களின் ஆதரவை குமாரசாமி இழந்துள்ளார்.

இந்த 18 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள். 2 பேர் சுயேட்சை எம்.எல்.ஏ.க் கள்.

குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற போது 119 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று இருந்தார். தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் விலகி விட்டதால் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 101 ஆக குறைந்துள்ளது. இதனால் குமாரசாமிக்கு சட்டசபையில் மெஜாரிட்டி பலம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க் களை சமரசம் செய்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா, மல்லிகார்ஜுனகார்கே, சிவகுமார், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி, சிவராமலிங்க கவுடா ஆகியோர் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

குமாரசாமிக்கு உதவும் வகையில் சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இதுவரை ஏற்கவில்லை. ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் வந்து தன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதை எதிர்த்து 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்தது சட்ட விரோதமானது என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறி உள்ளனர். இந்த மனு மீது சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி சுப்ரீம்கோர்ட்டில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்போஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரு தரப்பு வக்கீல்கள் வாதம் முடிந்த பிறகு நீதிபதிகள் கூறியதாவது:-

இது தொடர்பாக சபாநாயகர் இன்றே முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். பெங்களூருக்கு வரும் 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் கர்நாடக மாநில டி.ஜி.பி. உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 எம்.எல்.ஏ.க்களும் இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதுகாப்பு பெறலாம்.

10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முடிவு குறித்து சபாநாயகரிடம் தெரிவித்த பிறகு அதில் சபாநாயகர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பது பற்றி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். நாளை (வெள்ளிக்கிழமை) காலை இந்த வழக்கு விசாரணை மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

அப்போது சபாநாயகர் முடிவு பற்றி கோர்ட்டில் சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த வழக்கு விசாரணையில் உத்தரவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் மேலும் சிலர் குமாரசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் சவுமியா ரெட்டி, அஞ்சலி நிம்பல்கர், கணேஷ் கக்கரி ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சட்டசபைக்கு வந்தனர்.

ஆனால் சட்டசபையில் சபாநாயகர் இல்லாததால் அவர்கள் ராஜினாமா கடிதத்தை கொடுக்காமல் திரும்பி சென்று விட்டனர். இன்று அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுடன் மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதால் கர்நாடகா அரசியலில் மிகப்பெரிய பரபரப்பும், குழப்பமும் நிலவுகிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று குமாரசாமி பதவி விலக கோரி சட்டசபை அருகே தர்ணா போராட்டம் நடத்தியதால் பதட்டம் உருவானது.

இதைத் தொடர்ந்து சட்டசபை பகுதியில் அனுமதியின்றி யாரும் கூட்டம் நடத்தக் கூடாது என்று பெங்களூர் போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார். சட்டசபை பகுதியில் 144 தடை உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார். வருகிற 14-ந் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் விலகி சென்று விட்டதால் இனி ஆட்சியில் தொடர முடியாது என்ற நிலை குமாரசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்று அவர் ஆலோசித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று கர்நாடக மந்திரி சபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி ஆட்சி தொடர்பாக ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதால் பதவி விலகுவது நல்லது என்ற முடிவு மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதன்படி முதல்-மந்திரி பதவியில் இருந்து குமாரசாமி இன்று ராஜினாமா செய்வார் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ராஜினாமா செய்யாத பட்சத்தில் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும்.

கர்நாடக சட்டசபை நாளை (வெள்ளிக்கிழமை) கூடுகிறது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் கடும் எதிர்ப்பை குமாரசாமி எதிர் கொள்ள வேண்டி இருக்கும். எனவே அவர் அதற்கு முன்னதாக பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com