

புதுடெல்லி:
சசிகலாவின் அக்கா மகள் மற்றும் டிடிவி தினகரன் சகோதரி சீதளாதேவி, அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக 1.68 கோடி ரூபாய் சொத்து சேர்த்தது உறுதியானதையடுத்து அவர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட் தண்டனை விதித்தது. சசிகலாவின் அக்கா மகள் சீதளாதேவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்ச ரூபாய் அபராதமும், அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி, எஸ்.ஆர்.பாஸ்கரன் மற்றும் சீதளாதேவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டும் அவர்கள் இருவரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையாமல் இருந்ததன் காரணமாக ஐகோர்ட் அவர்கள் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனை அடுத்து, சீதளாதேவி மற்றும் பாஸ்கரன் சென்னை சி.பி.ஐ கோர்ட்டில் கடந்த மாதம் சரணடைந்தனர். இதனை அடுத்து, அவர்கள் இருவரையும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அவர் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். TTVDhinakaran #TamilNews