

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவுக்கும், மற்றொரு பகுதி ராமர் கோவில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில பிரச்சனை தொடர்பான ஆவணங்களின் மொழிபெயர்ப்பு பணிகளை மூன்று தரப்பினரும் 12 வாரங்களுக்குள் (மூன்று மாதம்) முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அலகாபாத் ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை, ஆங்கிலத்தில் 10 வாரங்களுக்குள் மொழிபெயர்க்கும்படி உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மொழிபெயர்ப்பு பணி முடிந்து டிசம்பர் 5-ம் தேதியில் இருந்து இறுதிக்கட்ட வாதம் நடைபெறும் என்று கூறிய நீதிபதிகள் எந்த சூழ்நிலையிலும் விசாரைண ஒத்திவைக்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.