

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் பொருளாதார அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இவ்வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க கார்த்தி சிதம்பரம் முன் ஜாமின் கோரி இருந்தார். இதன் அடிப்படையில் ஜூலை பத்தாம் தேதிவரை அவரை கைது செய்ய சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மே மாதம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு கார்த்தி சிதம்பரம் செல்ல நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
பயணம் செய்யும் விமானம், இந்தியாவுக்கு திரும்பும் தேதி ஆகியவற்றை விசாரணை முகமையிடம் தெரிவிக்க வேண்டும். வெளிநாடுகளில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கவோ, செயல்பாட்டில் உள்ள வங்கி கணக்குகளை முடிக்கவோ கூடாது. மேலும், வெளிநாடுகளில் சொத்து தொடர்பான எவ்வித பரிவர்த்தனைகளிலும் ஈடுபட கூடாது.