

புதுடெல்லி:
இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்த வழக்கில், நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான, மூன்று பேர் அடங்கிய மேற்பார்வை குழுவை, சுப்ரீம் கோர்ட், கடந்த ஆண்டு மே 2-ம் தேதி நியமித்தது.
அப்போது, 'இந்திய மருத்துவ கவுன்சிலின் நிர்வாகம் தொடர்பாக மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை அல்லது ஓராண்டுக்கு, இந்த குழு செயல்படும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.
இந்நிலையில் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், மருத்து கவுன்சிலை கண்காணிக்க நீதிபதிகள் குழுவுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தது.
இதனிடையே இந்த விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு கடந்த ஜூலை 13-ம் தேதிக்கு மாற்றி அமைக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டது.
இதனையடுத்து 5 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு சுப்ரீம் கோட்டில் அனுமதி கோரியிருந்தது. 5 நிபுணத்துவம் கொண்ட புதிய மருத்துவர்களை மத்திய அரசு பரிந்துரை செய்து இருந்தது.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலை கண்காணிக்க 5 மருத்துவர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ”மருத்துவர்கள் அனைவரும் நிபுணத்தும் வாய்ந்தவர்கள். மத்திய அரசு பரிந்துரை செய்த மருத்துவர்களின் பெயர்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்த 5 பேர் பேர் கமிட்டியில் பணி புரிய யாருக்காவது விருப்பம் இல்லை என்றால் மத்திய அரசு அவருக்கு பதிலாக வேறு ஒரு மருத்துவரை நியமித்துக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.