மருத்துவ கல்லூரி ஊழல் விவகாரம் - நீதிபதி மீது சி.பி.ஐ. வழக்கு தொடர அனுமதி

மருத்துவ கல்லூரி ஊழல் விவகாரம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சுக்லா மீது சி.பி.ஐ. வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்துள்ளார்.
நீதிபதி சுக்லா
நீதிபதி சுக்லா
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் எஸ்.என். சுக்லா. தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் ஒதுக்கீடு தொடர்பாக இவர் முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

2017-ம் ஆண்டில் தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை தொடர்பாக காலக்கெடுவை நீட்டித்து நீதிபதி சுக்லா உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகளை மீறி அவர் தனியார் மருத்துவ கல்லூரிக்கு சாதகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

நீதிபதி சுக்லா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து 2018-ம் ஆண்டில் அப்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சுக்லாவை பதவி விலக வேண்டும் அல்லது விருப்ப ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தினார். ஆனால் இதை ஏற்க சுக்லா மறுத்து விட்டு தொடர்ந்து பதவியில் நீடித்தார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் நீதிபதி சுக்லா மீது வழக்கு தொடர அனுமதிக்குமாறு தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியது சி.பி.ஐ.

அதை தொடர்ந்து பிரதமர் நரேந்திரமோடியிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி சுக்லாவை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சுக்லா மீது சி.பி.ஐ. வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்துள்ளார்.

1991-ம் ஆண்டுக்கு முன்பு வரை பதவியில் இருக்கும் நீதிபதி மீது வழக்கு தொடர அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பதவியில் இருக்கும் நீதிபதி மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com