

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் அனுராக் தாகூர். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு முன்னாள் சிஏஜி தலைமையிலான குழுவை நியமிக்க சுப்ரீட் கோர்ட் உத்தரவிட்டது. அப்படி நியமித்தால் தனித்து இயங்கும் பிசிசிஐ-யில் அரசு தலையீடு இருக்கும் என அனுராக் தாகூர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து ஐசிசி தலைவராக இருக்கும் ஷஷாங்க் மனோகரிடம் கருத்து கேட்டார். ஷஷாங்க் மனோகர் ஏற்கனவே பிசிசிஐ தலைவராக இருந்தவர். கடிதம் மூலம் கருத்தை தெரிவிக்க கோரினார். ஆனால் மனோகர் மறுத்துவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது ஐ.சி.சி. தலைவரிடம் ஆலோசனை கேட்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தார் அனுராக் தாகூர். ஆனால், நீங்கள் ஐ.சி.சி. தலைவரிடம் ஆலோசனை கேட்டதற்கு ஆதாரம் உள்ளது. நீங்கள் கோர்ட்டில் பொய் வாக்குமூலம் கொடுத்துள்ளீர்கள். அதனால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். இல்லையெனில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அனுராக் தாகூர் சார்பில் நேற்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ‘‘தவறாக சில தகவல் அளித்தருந்தால், அதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டின் மகத்துவத்தை எந்த அளவிலும் குறைத்து மதிப்பிடும் நோக்கத்தில் செயல்படவில்லை. அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட், அனுராக் தாகூரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவதிப்பு வழக்கு விவகாரத்தை கைவிட்டுள்ளது.