பந்தை சேதப்படுத்த மூலக்காரணம்: வார்னரின் எதிர்காலம் கேள்விக்குறி

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மூலக்காரணமாக இருந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவரது எதிர்காலம் கேள்விகுறியாக உள்ளது. #SAvAUS #Warner
பந்தை சேதப்படுத்த மூலக்காரணம்: வார்னரின் எதிர்காலம் கேள்விக்குறி
Published on

மெல்போர்ன்:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பந்தை சேதப்படுத்தி சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய புதுமுக வீரர் பேன்கிராப்ட், கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புதலுடன் பந்தை சேதப்படுத்தினார். வீடியோவில் இது பதிவாகி இருந்ததால் அவர்கள் வசமாக சிக்கி கொண்டனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இந்த சம்பவம் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது. சுமித், வார்னர் ஆகியோரின் கேப்டன், துணை கேப்டன் பதவியை பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுமித்துக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தது. அதோடு 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. பேன்கிராப்ட்டுக்கு 75 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் தென்ஆப்பிரிக்கா சென்றார். சுமித், வார்னர், பேன்கிராப்ட் ஆகிய 3 வீரர்களையும் உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டார்.

பயிற்சியாளர் லீமேனுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்பதால் அவர் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை அவமதிப்புக்கு உள்ளாக்கிய பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் தான் மூலக்காரணமாக இருந்தார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரது எதிர்காலம் கேள்விகுறிதாள்.

வார்னர் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடுவது இனி மிகவும் கடினம் என்று ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று அணியின் உள்வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.

பந்தை சேதப்படுத்திய (பால் டேம்பரிங்) திட்டத்தின் பின்னணியில் வார்னர் இருந்தார் என்பதும் ஒட்டு மொத்த அணிக்குமே அவரது திட்டம் தெரியும் என்றும் பேர்பேக்ஸ் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.

இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய அணியின் சில வீரர்கள் வார்னர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், அவரை விட்டு அவர்கள் விலகி இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

வார்னருடன் இனி களம் காணப்போவது இல்லை என்று சொல்லும் அளவுக்கு சில வீரர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே வார்னர் அணியின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து விலகி கொண்டார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மூலக்காரணமாக இருந்த பேன்கிராப்ட் செயல்படுத்துவதை சுமித் முட்டாள் தனமாக ஏற்றுக்கொண்டார் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

சுமித், வார்னர், பேன்கிராப்ட் ஆகிய 3 பேர் மீது என்ன நடவடிக்கை என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com