சார்பட்டா திமுக பிரசார படம்... இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

30 ஆண்டு கால நல்லாட்சியை திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
ஜெயக்குமார்
Published on

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், ஓ.டி.டி.யில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வடசென்னை மக்களிடையே 70-களில் குத்துச்சண்டை போட்டி மீது இருந்த ஆர்வம் குறித்து இந்த திரைப்படம் விரிவாக சித்தரிக்கிறது.

அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலை பா.ரஞ்சித், காட்சிப்படுத்தியுள்ளார். இது ஒரு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றாலும், சிலர் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதை வைத்து இணையத்தில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவர் படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, குதிரையேற்றம் ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்திக் கொண்டவர் எம்ஜிஆர்.

முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

 1980 ம் ஆண்டு தமிழ் நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்கு குத்துச் சண்டை மீது காதல் கொண்டிருந்தார்.

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார். ஆனால் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்ஜிஆர் அவர்களை கைகழுவியது போலவும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலை என்பது வரலாற்றை விட கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம் அது. ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கிப் போனதன் காரணம் என்னவோ? அதிகாரம் உள்ள இடத்தில் அடைக்கலமாக எதிர்க்கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அது அழகல்ல.

 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் என்னை போன்ற எண்ணற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வர்த்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை சார்பட்டா பரம்பரரை படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com