

சேலம்:
சேலம் அம்மாபேட்டை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் தனது வீட்டின் அருகே ஒரு கடையில் வர்க்கி தயாரித்து அதனை டீக்கடைகளுக்கு விற்பனை
செய்து வருகிறார். கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவால் கடையை திறக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வர்க்கி
செய்வதற்காக ரூ.5 ஆயிரத்திற்கு மைதா, டால்டா உள்ளிட்ட பொருட்களை வாங்கி கடையில் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு நேரத்தில் அவரது
கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும்,
அம்மாப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து தீப்பொறி விழுந்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.