நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய 1,187 சட்டங்கள் ரத்து - மத்திய மந்திரி சதானந்தகவுடா பேச்சு

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய 1,187 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய 1,187 சட்டங்கள் ரத்து - மத்திய மந்திரி சதானந்தகவுடா பேச்சு
Published on

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா கட்சியின் சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவு சார்பில் தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு கலந்துரையாடலை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாட்டில் தற்போது 37 நடுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த எண்ணிக்கை 16 ஆக குறைக்கப்படும். சிலருக்கு நடுவர் மன்றங்கள் மறுவாழ்வு மையங்களாக இருக்கிறது. குழப்பங்களை ஏற்படுத்திய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இதுவரை 1,187 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர் துறையில் 38 சட்டங்கள் உள்ளன. இதை 10 ஆக குறைக்க வேண்டும்.

நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே ஒரு நல்ல உறவு ஏற்பட வேண்டும். நாட்டின் நிதி ஒழுங்குமுறையை உறுதிப்படுத்த மத்திய அரசு ஒரு திடமான நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது. சிறிய நிறுவனங்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் சட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உரிய தீர்வு காணப்படும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இப்போது எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு நல்லாட்சியை வழங்கி இருக்கிறது. நாடு இழந்த பெருமையை மீட்டெடுத்து உள்ளோம். நாட்டில் நல்லாட்சியை வழங்குவது போலவே கர்நாடகத்திலும் வெற்றி பெற்று சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்துவோம்.

இவ்வாறு சதானந்தகவுடா பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com