சபரிமலை விவகாரம்- சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் மீதான வாதம் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
சபரிமலை விவகாரம்- சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரச்சூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் என 60க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். நாயர் சேவா சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் கே.பராசரன் மத நம்பிக்கை காரணமாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்றும், தீண்டாமையால் அல்ல என்றும் குறிப்பிட்டார். மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் சபரிமலைக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், வெறும் தீண்டாமை விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பல விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதி நாரிமன் விளக்கம் அளித்தார்.

அதன்பின்னர் பாரம்பரிய மரபுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும், அந்தந்த சமூகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது. அதேசமயம், கேரள தேவசம் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி அளித்த தீர்ப்புக்கு ஆதரவாக வாதாடினார்.

இவ்வாறு காரசாரமாக நடைபெற்ற வாதம் பிற்பகல் நிறைவடைந்தது. அனைத்து  தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். தேவைப்பட்டால், மனுதாரர்கள் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறினர். #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com