சபரிமலையில் இன்று நடை அடைப்பு - நேற்று சபரிமலைக்கு செல்ல முயன்ற 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்

நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்றதாக 6 பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜை முடிந்து இன்று சபரிமலை நடை அடைக்கப்படுகிறது. #Sabarimalai #IyappanTemple
சபரிமலையில் இன்று நடை அடைப்பு - நேற்று சபரிமலைக்கு செல்ல முயன்ற 6 பெண்கள் தடுத்து நிறுத்தம்
Published on

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது.

அதுமுதல் ஐயப்பனை தரிசிப்பதற்காக வந்த பெண்கள், பக்தர்களால் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணும், ஆந்திராவை சேர்ந்த டி.வி. பெண் நிருபர் கவிதா கோஷியும் கடந்த 19-ந் தேதி சபரிமலைக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை, 18-ம் படி அருகே வைத்து அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் திரும்பி சென்றனர்.

இதைப்போல நேற்று முன்தினம் சபரிமலைக்கு செல்ல முயன்ற தலித் பெண் ஆர்வலர் ஒருவரும், பக்தர்களின் போராட்டம் மற்றும் கனமழை காரணமாக பம்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

இவ்வாறு சபரிமலை விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆந்திராவை சேர்ந்த புனித யாத்திரை குழு ஒன்று நேற்று சபரிமலைக்கு வந்தது. இந்த குழுவில் இருந்த வாசந்தி (வயது 40), ஆதித்ய சேஷி (42) உள்பட சில பெண்களை பம்பை அருகே தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள், இந்த 2 பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதி மறுத்தனர். அந்த குழுவில் இருந்த 50 வயதுக்கு மேற்பட்ட பிற பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த 2 பெண்களிடமும் போலீசார் விவரங்களை தெரிவித்தனர். அதற்கு அந்த பெண்கள், சபரிமலையில் நடந்து வரும் போராட்டம் குறித்து தெரியாமல் வந்ததாகவும், கோவிலில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் நடைமுறைகளை தாங்கள் குலைக்க விரும்பவில்லை என்றும் எழுதி கொடுத்துவிட்டு திரும்பி சென்றனர்.

இதைப்போல ஆந்திராவை சேர்ந்த பாலம்மாள் (47) என்ற பெண்ணும் நேற்று மதியம் சபரிமலைக்கு வந்தார். வலியநடை பந்தல் அருகே பாலம்மாளை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை முற்றுகையிட்டு சரண கோஷம் எழுப்பினர். அப்போது எதிர்பாராத விதமாக பாலம்மாள் மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் மூலம் பம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சபரிமலைக்கு செல்ல முயன்ற புஷ்பலதா என்ற ஆந்திரா பெண்ணும் மரக்கூட்டம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவரும் திரும்பி சென்றார்.

இதைப்போல மேலும் 2 பெண்களும் நேற்று சபரிமலைக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். சபரிமலையில் நடை திறக்கப்பட்ட 17-ந் தேதியில் இருந்து நேற்று வரை, தடை செய்யப்பட்ட வயதுடைய மொத்தம் 12 பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத பூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று நடை அடைக்கப்படுகிறது. அங்கு மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் (நவம்பர்) மீண்டும் நடை திறக்கப்படும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்தார்.

சபரிமலையில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் மோதல் காரணமாக சபரிமலை வட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இன்று (திங்கட்கிழமை) வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Sabarimalai #IyappanTemple

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com