சபரிமலையில் பசுமை விமான நிலையம் - 31-ந்தேதிக்குள் ஆய்வு அறிக்கை தயார் என்று தகவல்

சபரிமலையில் பசுமை விமான நிலையம் அமைப்பது தொடர்பான ஆய்வு அறிக்கையை 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார்.
சபரிமலையில் பசுமை விமான நிலையம் - 31-ந்தேதிக்குள் ஆய்வு அறிக்கை தயார் என்று தகவல்
Published on

திருவனந்தபுரம்:

சபரிமலை சீசன் நேரத்தில் அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். எனவே, அதுபோன்ற சமயங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்வகையில், அங்கு பசுமை விமான நிலையம் அமைக்க கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள மாநில அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது.

எருமேலி அருகே 2 ஆயிரத்து 263 ஏக்கர் பரப்பளவிலான செருவல்லி எஸ்டேட்டில் இந்த விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப, நிதிசார்ந்த சாத்தியக்கூறுகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய லூயிஸ் பர்கர் கன்சல்டன்ட் என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆய்வு அறிக்கையை அந்நிறுவனம் 31-ந்தேதிக்குள் அளித்துவிடும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். மத்திய அரசு நிறுவனங்களிடம் தேவையான ஒப்புதல் பெற்ற பிறகு, அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com