

சென்னை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் எந்த முறைகேடும் இன்றி 100க்கு 100 சதவீதம் நேர்மையாக நடத்தப்பட்டது. பெரிய கலவரம், வன்முறை எதுவும் இன்றி உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 25 பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் வரும் 6-ம் தேதி காலை 10 மணக்கு பதவியேற்பார்கள்.
திமுக அளித்த புகார் தொடர்பாக உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தவறு ஏதேனும் நடந்திருந்தால் வீடியோ ஆதாரம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில், சில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. வார்டு மறுவரையறை செய்யும் பணிகளை இனி மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை நாங்கள் ஏற்க முடியாது. ஏனெனில் நாங்கள் அதனை மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.