ரூ. 50 கோடி லஞ்சம் வழக்கு: தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கம்

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனை கைது செய்த போலீசார் அவரது 5 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.
ரூ. 50 கோடி லஞ்சம் வழக்கு: தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கம்
Published on

புதுடெல்லி:

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் புரோக்கராக செயல்பட்ட சுகேஷ் சந்திர சேகர் கடந்த 16-ந்தேதி டெல்லியில் கைதானார். அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கடந்த 25-ந்தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

டெல்லி கோர்ட்டு அனுமதியுடன் டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

டெல்லி உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான போலீஸ் படையினர் தினகரன், மல்லிகார் ஜுனாவை சென்னைக்கு அழைத்து வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சென்னையில் நடந்த விசாரணைக்குப் பின் டி. டி.வி.தினகரன், மல்லிகார் ஜுனா ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற் கொள்ளப்பட்டது.

இதற்கிடையே தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய ஹவாலா ஏஜெண்டு நரேஷ் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர்தான் சுகேஷ் சந்திரசேகருக்கு ரூ. 50 கோடி லஞ்சப் பணத்தை சென்னையில் இருந்து கொச்சி வழியாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகரிடம் ஒப்படைத்தார் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

கடந்த 28-ந்தேதி தாய்லாந்தில் இருந்து டெல்லி திரும்பிய போது நரேஷ் கைது செய்யப்பட்டார். நேற்று அவரது வீடு அலுவலகத்தில் டெல்லி போலீசார் சோதனையிட்டனர். அப்போது ரூ.50 லட்சம் சிக்கியது. இந்தப் பணம் குறித்து நரேசிடம் போலீசார் விசாரித்தபோது, அது தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டி.டி.வி. தினகரன் கொடுத்த மீதிப் பணம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து டி.டி.வி. தினகரன் முன்னிலையில் ஹவாலா ஏஜெண்டு நரேசை வைத்து நேரடியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்தப் பணம், தான் கொடுத்து அனுப்பியதுதான் என்பதை டி.டி.வி.தினகரன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் அடுத்த கட்டமாக தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக டெல்லி போலீசாரின் வேண்டுகோளை ஏற்று ஸ்டேட் வங்கியில் உள்ள அவரது 5 கணக்குகளும் முடக்கப்பட்டன.

அடுத்து அவர் வங்கிகள் மூலம் யார்-யாருக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளார், எந்த வகையில் பண பரி மாற்றம் நடந்துள்ளது போன்றவை குறித்த டெல்லி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

இந்த வழக்கில் ஹவாலா ஏஜெண்டு நரேஷ் தனக்கு பணம் கொடுத்ததாக தமிழக அமைச்சர்கள் சிலரது பெயரையும் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி டெல்லி போலீசார் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. அதேபோல் ஹவாலா ஏஜெண்டு நரேசின் 2 நாள் காவலும் இன்றுடன் முடிவடைகிறது.

இதையடுத்து டி.டி.வி. தினகரன், மல்லிகார்ஜுனா, நரேஷ் ஆகிய 3 பேரும் இன்று மாலை 4 மணிக்கு டெல்லி திஸ்ஹசாரே கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

இவர்களிடம் மேலும் விசாரிக்க வேண்டி உள்ளதால் போலீசார் காவல் நீடிப்பு கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு தினகரனை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரின் வக்கீல் கோபிநாத்திடம் டெல்லி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது சுகேசுக்கும் டி.டி.வி. தினகரனுக்கும் இடையே நடைபெற்ற பேரம் குறித்து தெரியுமா? என விசாரித்ததாக தெரிகிறது.

இதேபோல் ஹவாலா ஏஜெண்டு புல்கிட்டிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து டெல்லிக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதில் புல்கிட்டின் பங்கு பற்றியும் விசாரணை நடத்தினார்கள். இதனால் வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com