திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம்-தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #TrichyAirport #ForeignCurrency #Seized
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணம்.
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணம்.
Published on

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்றிரவு தனியார் விமானம் புறப்பட இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ரியாஸ் அகமது என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் இந்திய ரூபாயில் 17.45 லட்சம் மதிப்பில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த நாசர் என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவர் ரூ.2.91 லட்சம் மதிப்பிலான 93 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணம், தங்கம் கடத்தல் தொடர்பாக ரியாஸ் அகமது, நாசர் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடத்தலுக்கு விமான நிலைய அதிகாரிகளே உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் சிலரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையம் வழியாக கடத்தல் சம்பவங்கள் குறைந் திருந்தது.

தற்போது மீண்டும் திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தி வருவது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.4 கோடி மதிப்பில் பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தலை தடுக்க அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  #TrichyAirport #ForeignCurrency #Seized

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com