

புதுடெல்லி:
பல்வேறு தங்குமிட சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறித்து மத்திய அரசின் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் நேற்று விளக்கம் அளித்தது. அதன்படி, ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக சேருபவர்கள் அறை வாடகைக்கு செலுத்தும் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நோயாளிகளுக்கு உணவு, குளிர்பானம், பேக்கரி பொருட்கள் போன்றவை வழங்கும் சேவைகளுக்கு காம்போசிசன் வரி விதிப்பு திட்டத்தில் 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
ஓட்டல், விருந்தினர் விடுதி, பயணிகள் விடுதி ஆகியவற்றில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான அறை வாடகைக்கு ஜி.எஸ்.டி. கிடையாது. ரூ.1,000 முதல் ரூ.2,500 வரையிலான அறை வாடகைக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி.யும், ரூ.2,500 முதல் ரூ.7,500 வரையிலான அறை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யும், ரூ.7,500-க்கு மேற்பட்ட அறை வாடகைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.யும் வசூலிக்கப்படும். கூடுதல் படுக்கைக்கு செலுத்திய கட்டணம் உள்பட ஒட்டுமொத்த தொகைக்கும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும்.
கேளிக்கை நிகழ்ச்சிகள், தீம் பார்க், தண்ணீர் பார்க், சூதாட்ட விடுதி, பந்தய மைதானம், பாலே நடனம், ஐ.பி.எல். உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கான அனுமதி கட்டணத்துக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.