பாகிஸ்தானில் மத அவமதிப்புகாக மரண தண்டனை - ரோம் நகரில் கோபத்தில் சிவந்த கொலோசியம் அரங்கம்

மத அவமதிப்புகாக பாகிஸ்தான் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரோம் நகரில் உள்ள கொலோசியம் அரங்கம் சிவப்பு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது. #Colosseumturnedred #Pakistanblasphemylaw
பாகிஸ்தானில் மத அவமதிப்புகாக மரண தண்டனை - ரோம் நகரில் கோபத்தில் சிவந்த கொலோசியம் அரங்கம்
Published on

ரோம்:

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், ஷேய்க்குப்புரா மாவட்டத்தை சேர்ந்த ஆசியா பீபி (வயது 44) என்ற கிறிஸ்தவ பெண், 2009-ம் ஆண்டு, ஜூன் மாதம் சக பெண்களிடம் முஸ்லிம் மதத்துக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய விசாரணை நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் இந்த குற்றச்சாட்டின் பேரில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் பெண் ஆசியா பீபி ஆவார். இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, உலகளவில் கடும் விமர்சனங்களுக்கு வழி வகுத்தது.

இதனிடையே அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில், ஆசியா பீபி அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் அவர், தனிப்பட்ட விரோதம் காரணமாக என் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.

இதையடுத்து இந்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு ஆசியா பீபியை தூக்கில் போட தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு அது உத்தரவிட்டது. அப்பொழுது முதல் ஆசியா பீபி சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுதலை செய்யக் கோரி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆசியா பீபியை விடுதலை செய்ய கோரி அமெரிக்க செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பின்பற்றப்பட்டுவரும் இந்த மரணதண்டனை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மரணதண்டனைக்கு ஆளாகியுள்ள ஆசியா பீபிக்கு ஆதரவாகவும் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கொலோசியம் அரங்கம் நேற்று சிவப்பு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.

கிறிஸ்துவர்களின் புனிதத்தளமான கொலோசியம் அரங்கத்திற்கு வெளியே நேற்றிரவு நூற்றுக்கணக்கான கிறிஸ்துவர்கள் கூடி ஆசியா பீபி மற்றும் அவரது குடும்பத்துக்கு ஆதரவாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தில் ஆசியா பீபியின் கணவர் மற்றும் மகள் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக வாடிகன்சிட்டி சென்ற அவர்கள் போப் பிரான்சிசை சந்தித்து பேசினர். #Colosseumturnedred #Pakistanblasphemylaw #Rome #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com