மொகாலி ஒருநாள் கிரிக்கெட்: ரோஹித் ஷர்மா சதம், இந்தியா 43 ஓவர்களில் 277/1

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா சதம் அடித்து அசத்தினார்.
மொகாலி ஒருநாள் கிரிக்கெட்: ரோஹித் ஷர்மா சதம், இந்தியா 43 ஓவர்களில் 277/1
Published on

மொகாலி:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இது இந்திய அணிக்கு வாழ்வா-சாவா போட்டியாகும். இதிலும் மண்ணை கவ்வினால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டி இருக்கும்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் பொருப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். 

அரைசதம் அடித்த தவான் 68 ரன்களில் சசித் பதிரானா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் - ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் இறங்கினர். ரோஹித் ஷர்மாவும் அரைசதம் கடந்தார். தனது 2-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினார். 

மற்றொரு முனையில் நிலைத்துநின்று விளையாடிய கேப்டன் ரோஹித் ஷர்மா சதம் அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இது சர்வதேச ஓருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 16-வது சதமாகும்.

இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக சதம் அடித்த வீரர்களில் பட்டியலில் ரோஹித் ஷர்மா நான்காவது இடத்திற்கு முன்னேறினார். இந்த பட்டியலில் டெண்டுல்கர் (49), கோலி (32), கங்குலி (22) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

இந்திய அணி 43 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 116 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் 81 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com