தஞ்சை அருகே நாற்காலியில் பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த முகமூடி கும்பல்

தஞ்சை அருகே பெண்ணை கட்டிப்போட்டு 12 பவுன் - ரூ.60 ஆயிரம் பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் வல்லம்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே நாற்காலியில் பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த முகமூடி கும்பல்
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்த வல்லம்புதூர் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 65). இவரது மனைவி தனலட்சுமி (60). நீலமேகம் ஆடுகளை ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு சென்று கிடைபோடும் தொழில் செய்து வருகிறார்.

தற்போது அவர் ஆடுகளுடன் வெளியூர் சென்று தங்கி உள்ளார். இந்த நிலையில் தனலட்சுமி நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவையும், பின் பக்க கதவையும் பூட்டிவிட்டு திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார்.

இந்த நிலையில் இரவு 2 மணியளவில் முகத்தை துணியால் மறைத்து கொண்டு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 12 பவுன் நகைகளை திருடி உள்ளனர். பின்னர் திண்ணையில் படுத்திருந்த தனலட்சுமி அணிந்திருந்த தாலிக்கயிறை அறுக்க முயன்றுள்ளனர். அப்போது விழித்துக் கொண்ட தனலட்சுமி திருடன் திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். அவரை 2 பேரும் மிரட்டி வீட்டுக்குள் தூக்கி சென்று நாற்காலியில் கட்டி வைத்து மீண்டும் பணம் கேட்டுள்ளனர். பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன தனலட்சுமி வீட்டில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன் பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து தனலட்சுமி வல்லம் போலீசில் இன்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை மிரட்டி நகை-பணத்தை பறித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வல்லம்புதூரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் பற்றி அறிந்த பொதுமக்கள் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடித்து நகை-பணத்தை மீட்க வேண்டும். இரவில் போலீஸ் ரோந்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வல்லம்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com