பேஸ்-புக்கில் நீதிபதியை விமர்சனம்: கைதான பெண் வேலூர் ஜெயிலில் அடைப்பு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருபாகரனை பேஸ்-புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
கைதான மகாலட்சுமியை போலீசார் ஜெயிலுக்கு அழைத்து சென்ற காட்சி.
கைதான மகாலட்சுமியை போலீசார் ஜெயிலுக்கு அழைத்து சென்ற காட்சி.
Published on

வேலூர்:

தமிழ்நாட்டில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டத்தின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்தை சட்டவிரோதமானதாக அறிவிக்கவேண்டும் என்று மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ஐகோர்ட்டு மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். அதேநேரத்தில் கல்விகட்டணம் குறித்து சென்னை ஐகோர்ட்டில் மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் அரசு பள்ளி ஆசிரியர்கள் பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து நீதிபதியை வேலூர் சத்துவாச்சாரி குருதோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமாரின் மனைவி மகாலட்சுமி (வயது 41) என்பவர் பேஸ்புக்கில் விமர்சனம் செய்திருந்தார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி தெற்குபோலீஸ் நிலையத்தில் புகார்செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நீதிபதி குறித்து விமர்சனம் செய்த மகாலட்சுமியை நேற்று வேலூர் தெற்கு போலீசார் கைதுசெய்து வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க மாஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மகாலட்சுமியை போலீசார் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

இந்திய தண்டனை சட்டம் 153, 505(1), (தீ) மற்றும் 505(1) (நீ) ஆகிய பிரிவுகளின் கீழ் மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

153 பிரிவு என்பது கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரமூட்டுதல், 505 (1), (தீ) என்பது பொது மக்களுக்கு பயம் அல்லது பீதியை விளைவிப்பதன் மூலம் அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், அறிக்கையை பரப்புவது, 505 பிரிவு (1) (நீ) என்பது ஒரு பிரிவு அல்லது வகுப்பை சார்ந்தவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் தூண்டுதல் அறிக்கை அல்லது பேச்சுக்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com