

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் நேற்று இரவு கோவையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 9-ந்தேதி அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 6 மாத ஜெயில் தண்டனை விதித்தது. அதேநாளில் சென்னை வந்த நீதிபதி கர்ணன் தலைமறைவானார். 1 மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவர் செல்போன் சிம்கார்டுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்ததால் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இதற்கிடையே அவர் கடந்த 12-ந் தேதி நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவரது நண்பர்கள், உறவினர்கள் செல்போன் எண்களை பட்டியல் சேகரித்து மேற்கு வங்க போலீசார் தேடுதலை தீவரப்படுத்தினர். இதில் ஒரு செல்போன் எண் கோவையை காட்டியது.
இதைத்தொடர்ந்து நேற்று கோவை வந்த மேற்கு வங்க உயர் போலீஸ் அதிகாரிகள் கோவை போலீசார் உதவியை நாடினர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் செல்போன் டவர் மூலம் கண்காணித்ததில் நீதிபதி கர்ணன் கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி அருகே உள்ள மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக இரவு 7.30 மணிக்கு மேற்கு வங்க போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு நீதிபதி கர்ணனை கைது செய்தனர். பின்னர் இரவு அவரை கோவை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து இரவு 11.15 மணிக்கு விமானத்தில் சென்னை கொண்டு சென்றனர். இன்று அதிகாலை அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டார்.
நீதிபதி கர்ணன் தங்கியிருந்த அறையில் இருந்த கட்டில், ஏர்கூலர்.
கடந்த வாரம் வியாழக்கிழமை தான் நீதிபதி கர்ணன் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் ஒரு கட்டிலும், அதன் அருகே ஏர்கூலரும் இருந்தது. வீட்டில் போலீசார் சோதனை செய்த போது ஒரு டைரி, சமையல் பொருட்கள் ஆகியவை மட்டும் இருந்தது.
கைதான நீதிபதி கர்ணன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீதிபதி கர்ணன் கோவை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது எடுத்தபடம்.
என்னை கைது செய்வதாக கூறுகிறார்கள். இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். கோவையில் போலீசார் எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்கவிலலை.
இவ்வாறு அவர் கூறினார்.