

தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சைப்பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் பிராணவாயு கருவி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,542 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 1000 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள நபர்கள் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வல்லம் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் டாக்டர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 30 படுக்கை வசதிகள் மற்றும் பிராண வாயு கருவி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படாத நபர்கள் வல்லம் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் பட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கும்பகோணம் பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, அடுத்த வாரம் முதல் செயல்படவுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் முடிவு தெரிந்து விடும். இதுவரை யாருக்கும் தாமதம் கிடையாது.
தஞ்சை மாவட்டத்தில் 180- க்கும் மேற்பட்ட காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு 11,958 நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், கைகழுவுதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாத காரணத்திற்காக இதுவரை ரூ.28 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) டாக்டர் மருததுரை மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.