ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. மாநிலங்களவையில் கோரிக்கை
புதுடெல்லி:
ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக தமிழகத்தில் இருந்து மீனவர்கள் 400 பேர் வரை சென்றுள்ளனர். அந்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமுடன் பரவி வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் அதன் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது. ஈரான் அரசு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள், இந்தியாவுக்கு தங்களை திரும்ப அழைத்து செல்வதற்கான தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். தமிழகம் திரும்பிவிட்டால் திரும்ப மீன்பிடி தொழிலுக்காக மீனவர்கள் வராமல் இருந்து விடுவர் என்பதற்காக தங்களிடமுள்ள ஆவணங்கள், கைப்பற்றி வைக்கப்பட்டு உள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுபற்றி மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் முட்டம் ஆகிய பகுதிகளை சார்ந்த 400 மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அடிப்படை தேவைகளான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கூட கிடைக்காத நிலையில் இருக்கின்ற அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

