

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜி.எஸ்.டி.யில் பருத்தி நூல் மற்றும் துணி விற்பனை செய்பவர்களுக்கு 5 விழுக்காடு, பாவு எடுத்து ஒப்பந்த முறையில் வேலை செய்பவர்களுக்கு 18 விழுக்காடு வரி விதிக்கப்பட உள்ளது.
இதனால் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கரூர், ஈரோடு, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் இந்த வரியை நீக்கக் கோரி வேலை நிறுத்தம் செய்துள்ளன. மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு இதுவரை வரி விதிக்கப்படவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி.யில் 5 முதல் 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் பட்டாசும் சேர்க்கப்பட்டு, அவற்றுக்கு 28 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் சுமார் 1200 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் 51 ஆலைகள் மட்டுமே கலால் வரி, மாநில வரி செலுத்துகின்றன. மீதமுள்ள 1150 ஆலைகள் 14.5 விழுக்காடு மாநில வரி மட்டுமே கட்டுகின்றன என்றும், கலால் வரி கிடையாது என்றும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கூறி உள்ளது.
இந்நிலையில் பட்டாசுக்கு மத்திய கலால் வரி 12.5 விழுக்காடு, மாநில வரி 14.5 விழுக்காடு, சேவை வரியைச் சேர்த்தே ஜி.எஸ்.டி. 28 விழுக்காடு விதிக்கப்படுவதாக ஜி.எஸ்.டி. வரி நிர்ணயிக்கும் குழு கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. பட்டாசு அடக்க விலையில் 30 விழுக்காடு மட்டுமே மூலப்பொருள் மற்றும் சேவைகளின் பங்கு என்பதால் உள்ளீட்டு வரி வரவு 4 விழுக்காடு மட்டுமே கிடைக்கும் என்றும், மின்சாரம், இயந்திரம் எதுவும் இல்லாமல் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் தொழில் என்பதால் தீப்பெட்டிக்கு 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் போல பட்டாசுக்கும் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி விதிக்கப்பட வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் வைத்துள்ள கோரிக்கை நியாயமானதாகும்.
எனவே மத்திய அரசு பட்டாசு மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்க ஆவன செய்ய வேண்டும்.