

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு பற்றி ரத்தினசபாபதி எம்.எல்.ஏ. கூறியதாவது:-
எங்கள் மீது கடந்த 27-ந்தேதி அ.தி.மு.க. கொறடா சில புகார்களை கூறினார். அதன் பேரில் கடந்த 2-ந்தேதி எங்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் கடந்த 3-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் இது தொடர்பாக மனு செய்தோம்.
எங்களது கோரிக்கையை ஏற்று சுப்ரீம்கோர்ட்டு இன்று சபாநாயகர் நோட்டீசுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தர்மம் வென்றுள்ளது. நீதி வென்றுள்ளது. எனவே சபாநாயகரை சந்திப்பது பற்றி சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்.
நாங்கள் தெய்வமாக கருதும் அம்மா வழியில் நாங்கள் நடக்கிறோம். அவர்கள்தான் எங்களை நேரடியாக தேர்வு செய்து தேர்தலில் போட்டியிட செய்து எம்.எல்.ஏ. ஆக்கினார். என்றென்றும் அவர் காட்டிய வழியில்தான் நடப்போம்.
நாங்கள் அ.தி.மு.க.வுக்கு எதிராகவோ, அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவோ எந்தவித சூழ்ச்சியும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் அ.தி.மு.க. கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆதரவாக இருக்கிறோம். அதற்கு பரிசாக தான் எங்களை தகுதி நீக்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட 11 பேருக்கு துணை முதல்- அமைச்சர் மற்றும் பொறுப்புகளை வழங்கி உள்ளனர்.