

லக்னோ:
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த 2 எம்.பி. தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தது.
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி இந்த இரண்டிலும் வெற்றி பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு கொடுத்ததால் சமாஜ்வாடி வெற்றி பெற்றது.
இனி வரக்கூடிய தேர்தல்களிலும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படும்.
இந்த நிலையில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணியால் 2019 பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மத்திய மந்திரியான ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளார்.
பா.ஜனதா கூட்டணியில் இந்திய குடியரசு கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-
2019 பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி ஏற்பட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும். 25 முதல் 30 இடங்கள் வரை பா.ஜனதா இழக்கும். ஆனாலும் பா.ஜனதா 50 தொகுதிகளை கைப்பற்றும். ஆனால் இந்த முடிவு மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தாது.
அதே நேரத்தில் மாயாவதி பா.ஜனதா கூட்டணிக்கு வந்தால் பா.ஜனதா அனைத்து இடமான 80 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
பிரதமர் மோடிக்கு யாரும் சவால் கிடையாது. ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்ட யாரும் அவருக்கு ஈடு கிடையாது.
மேல்சபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சமாஜ்வாடி துரோகம் செய்து விட்டது. இதை மாயாவதி புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதாவலே கூறியுள்ளார்.
2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 5 தொகுதியையும், காங்கிரஸ் 2 தொகுதியையும் கைப்பற்றின.