

நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் தமிழக சுகாதார அமைச்சர் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 23 பேர் மட்டுமே பலியாகி உள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார். இது மிகவும் குறைவான எண்ணிக்கை ஆகும்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மறைக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 1117 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியும்.
தமிழக அரசு இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் பலியாகி உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் கருவி ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த கருவியை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒரு ஆண்டுக்கு மேலாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தான் உள்ளாட்சி அமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை சரியான முறையில் எடுத்து இருப்பார்கள்.
பிரதமர் மோடி பொருளாதார வளர்ச்சியில் சரிவு இல்லை என்று கூறுகிறார். பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு பிறகு 5.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது. மோடி ஆட்சி அமைத்து 40 மாதம் ஆகிறது. இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும்.
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி கூறினார். ஆனால் பா.ஜனதா ஆட்சி நடக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்து உள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று மோடி கூறினார். ஆனால் ஒன்றரை லட்சம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை.
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். உடனே அவர்கள் அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். ஆளுனர் உடனே சடடசபையை கூட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இது தமிழக அரசு செயலற்ற நிலையில் உள்ளதையே காட்டுகிறது.
பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநிலங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், சீர்குலைக்கவும் மத்திய அரசு நினைக்கிறது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் கட்டுப்பாடடில் வைத்திருக்கிறது. வருமான வரி சோதனை உள்பட பல சோதனைகள் மூலம் மிரட்டி அவர்களை கட்டுப்படுத்துகிறது.
காங்கிரஸ் பொருளாதார கொள்கைக்கும், பா.ஜனதா பொருளாதார கொள்கைக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு தான் தள்ளுபடி செய்ய முடியும்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும். தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால் தமிழக மின்வாரியம் கடனில் தத்தளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.