

தர்மபுரி:
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தர்மபுரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அங்கு கல்வி வளர்ச்சிக்கான பணிகள் நடைபெறவில்லை. ஊழல்கள் நடைபெறுகிறது.
தர்மபுரியில் தலைமையிடமாக கொண்டு பல்கலைக்கழகம் ஒன்று தொடங்க வேண்டும். அதற்கு அவ்வையார் பெயர் சூட்ட வேண்டும்.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களிடம் எந்தவிதமான பிரதிபலன்கள் எதிர்பார்க்காமல் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 950 உயர் நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசியர் பணி காலியிடமாக இருக்கிறது. இதை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் உள்பட 3 வேட்பாளர்கள் ரூ.500 கோடி வரை செலவு செய்துள்ளனர். இதை வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.82 லட்சம் வரை செலவு செய்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் பல கோடி ரூபாய் வேட்பாளர்கள் செலவு செய்துள்ளனர். தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் உடன் இருந்தனர்.