இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் - ராமதாஸ்

இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Ramadoss
இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் - ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கைப் போர்க்குற்றம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையில் மிக முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்திய குற்றவாளிகளை தண்டிக்க இலங்கை அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அது குறித்து பன்னாட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார்.

இத்தகைய தருணத்தில் ‘‘போர்க்குற்றம் உள்ளிட்ட பன்னாட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கக் கூடாது என்பதுதான் பன்னாட்டு சட்டம். அதுதான் ஐக்கிய நாடுகள் அவையின் கொள்கை’’ என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் கூறியிருப்பது ஈழத்தமிழர்களுக்கு சாதகமான திருப்பம் ஆகும். அத்துடன், இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய தீர்மானத்தை இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மாசடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக முன் வைப்பதும் வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். இம்முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் துணை நிற்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவரின் அறிக்கை மீது இம்மாதம் 20ஆம் தேதி விவாதம் நடத்தப்பட்டு, 21-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அந்தத் தீர்மானத்தில், போர்க்குற்ற விசாரணையை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை இலங்கைக்கான உத்தரவாக மாற்றம் செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஐ.நா. தீர்மானத்தை இலங்கை முறையாக நிறைவேற்றுகிறதா? என்பதை கண்காணிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அலுவலகத்தை இலங்கையில் திறக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக, ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலைக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்; போர்க் குற்றங்களை விசாரித்து ஆவணப்படுத்துவதற்கான சர்வதேச நெறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Ramadoss

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com