சத்துணவில் முட்டையை நிறுத்தக்கூடாது: ராமதாஸ் அறிக்கை

முட்டை விலை உயர்வை பொருட்படுத்தாமல் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்து முட்டை வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சத்துணவில் முட்டையை நிறுத்தக்கூடாது: ராமதாஸ் அறிக்கை
Published on

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டப்படி மாணவர்களுக்கு கடந்த இரு நாட்களாக முட்டை வழங்கப்படவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பயிலும் வயதில் உள்ள சிறுவர்களில் 46 விழுக்காட்டினர் நுண்ணூட்டச் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழ்மை காரணமாக மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காகவும், மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் சத்துணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக மாணவ, மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

மாணவர்களின் நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு தொடரும் நிலையில் முட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டிருப்பது எந்த வகையிலும் சரியானதல்ல.

வெளிச்சந்தையில் முட்டை விலை அதிகரித்து விட்டதால் தான் முட்டை வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. முட்டை விலை அதிகரித்ததைக் காரணம் காட்டி மாணவ, மாணவியருக்கு முட்டை வினியோகத்தை நிறுத்துவதை ஏற்க முடியாது.

எனவே, முட்டை விலை உயர்வை பொருட்படுத்தாமல் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தொடர்ந்து முட்டை வழங்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com