ஐகோர்ட்டு நீதிபதிகள் அவமதிப்பு - கவர்னர் மாளிகை விளக்கம் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பதவியேற்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் அவமதிப்பு தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #HighCourt #Ramadoss
ஐகோர்ட்டு நீதிபதிகள் அவமதிப்பு - கவர்னர் மாளிகை விளக்கம் அளிக்க ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னையிலுள்ள ஆளுனர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி தகில்ரமணி பதவியேற்பு விழாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான படி நிலை வரிசை காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசியல மைப்பு படிநிலை வரிசைப்படி மரியாதை வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விஜய கமலேஷ் தகில்ரமணியின் பதவியேற்பு விழா ஆளுனர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முதல் வரிசைகளில் அமரவைக்கப்பட வேண்டும் என்பது தான் மரபு ஆகும். புரோட்டாக்கால் எனப்படும் அரசியலமைப்புப்படி நிலை வரிசையும் இதையே வலியுறுத்துகிறது. ஆனால், நேற்றைய விழாவில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் வரிசைகளில் அமர வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏதோ மூன்றாம் தர மனிதர்களைப் போல பின்வரிசைகளுக்கு தள்ளப்பட்டனர். நீதியரசர்கள் அமருவதற்கு முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் படிநிலை வரிசைப்படி தங்களுக்கு மரியாதை வழங்கப்படாததால் வருத்தமடைந்த இரு நீதிபதிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளிநடப்பு செய்ய முயன்றுள்ளனர். ஆனால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தலையிட்டு அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வெளி நடப்பு செய்வதைத் தடுத்துள்ளார். மற்ற நீதியரசர்களும் இந்த அவமதிப்பால் வேதனை அடைந்தாலும், நாகரிகம் கருதி அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு நீதியரசர் ரமேஷ் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘பதவியேற்பு விழாவில் படிநிலை வரிசைப்படியான மரியாதை வழங்கப்படாதது வருத்த மளிப்பது மட்டுமின்றி, மிகவும் கவலையளிக்கும் நிகழ்வும் ஆகும். அரசியலமைப்புச் சட்ட பேராளர்களான நீதிபதிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்குமான படிநிலை வரிசை ஆளுனர் மாளிகை அதிகாரிகளுக்கு தெரியாதா? அல்லது அமைச்சர்களுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் கீழானவர்கள் தான் நீதிபதிகள் என்பது தான் அவர்களின் புரிதலா?’’ என்று வினா எழுப்பியுள்ளார். இவ்வினாக்கள் நியாயமானவை; ஆளுனர் மாளிகையால் விளக்கமளிக்கப்பட வேண்டியவை.

மாநில அரசு சார்பில் நடத்தப்படும் விழாக்களிலும், மற்ற நிகழ்வுகளிலும் படி நிலை வரிசை பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்காகவே தமிழக அரசின் பொதுத்துறையில், துணை செயலாளர் நிலையிலான அதிகாரி தலைமையில் தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அப்பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி இதற்கு முன் ஆளுனர் மாளிகையில் பணியாற்றியவர் தான்.

இருந்தும் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பை தடுத்து நிறுத்த தவறியது கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இத்தகைய அவமதிப்பு இழைக்கப்பட்டது குறித்து ஆளுனர் மாளிகை விளக்க மளிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், நடந்த தவறுக்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் தமிழக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com