

திராவிடக் கட்சிகளின் ஊழல்களுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஊழலை ஒழிப்பதற்கான அமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு தட்டிக் கழிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 2013-ம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்து உள்ளதாகவும், அதனால் முதன்மை சட்டத்துடன் முரண்பாடு ஏற்படாத வகையில், மத்திய அரசு செய்ய உள்ள திருத்தங்களை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கான லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது அலைகள் ஓய்ந்த பின்னர் கடலில் குளிக்கலாம் என்கிறார். இது எப்படி சாத்தியமில்லையோ, அதேபோல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா வருவதும் சாத்தியமில்லை என்பது தான் இதன் பொருளாகும்.
திராவிடக் கட்சிகளின் ஊழல்களுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வராவிட்டால் எந்த நேரமும் மக்கள் புரட்சி வெடிக்கலாம். எனவே, அபத்தமான காரணங்களை இனியும் கூறிக் கொண்டிருக்காமல் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.