தேடப்படும் குற்றவாளியான அன்புசெழியனை அமைச்சர்கள் சந்திப்பதா?: ராமதாஸ் கண்டனம்

அமைச்சர் செல்லூர் ராஜு இல்ல விழாவில் கலந்து கொண்ட தேடப்படும் குற்றவாளியான அன்புசெழியனை அமைச்சர்கள் சந்தித்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேடப்படும் குற்றவாளியான அன்புசெழியனை அமைச்சர்கள் சந்திப்பதா?: ராமதாஸ் கண்டனம்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மதுரையில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கந்து வட்டிக்காரர் அன்புசெழியனும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்திகள் உண்மை என்றால் முதல்-அமைச்சர் பழனிச்சாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. செல்லூர் ராஜுவின் இல்ல நிகழ்வில் அனைத்து அத்துமீறல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இந்த காதணி விழாவில், தேடப்படும் குற்றவாளியான கந்துவட்டி அன்புசெழியனும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அன்புசெழியனுக்கு அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் வணக்கம் தெரிவித்ததாக இணைய ஊடகங்களில் செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

விழாவின் முடிவில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் விருந்து சாப்பிட்ட அறைக்குள் நுழைய அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அந்த அறைக்குள் கந்துவட்டி அன்புசெழியன் மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

அசோக்குமார் தற்கொலை வழக்கில் அன்பு செழியனின் முன்பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவரைக் கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அவர் தொடர்ந்து தேடப்படும் குற்றவாளியாகவே உள்ளார். அவரை தமிழக அமைச்சரவையில் 5-வது இடத்தில் உள்ள அமைச்சர் அவரது இல்ல விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்.

கடந்த காலங்களில் முதல்-அமைச்சர் உள்ளிட்ட உயர்பதவியில் இருந்தவர்கள், தேடப்படும் குற்றவாளி தங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களை சந்திக்க அனுமதித்ததில்லை. முந்தைய ஆட்சிக்காலத்தில் குற்றவழக்கில் சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமது உறவினரை மூத்த அமைச்சர் ஒருவர் முறைப்படி நேரில் சென்று பார்த்ததே பெரும் சர்ச்சையானது.

குற்றவாளியை சந்தித்த செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் இனியும் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com