மேற்கு வங்கத்தில் மதக்கலவரம்: கவர்னர், முதல் மந்திரியிடம் ராஜ்நாத்சிங் பேச்சு

மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்ட மதக்கலவரம் தொடர்பாக, கவர்னர் கேசரிநாத் திரிபாதி மற்றும் முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
மேற்கு வங்கத்தில் மதக்கலவரம்: கவர்னர், முதல் மந்திரியிடம் ராஜ்நாத்சிங் பேச்சு
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வைரலாகப் பரவியதால், பாதுரியா பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இதேபோல் அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

இதையடுத்து, கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், கடைகளையும் அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. எனவே, 4 கம்பெனி எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் (400 வீரர்கள்) வரவழைக்கப்பட்டனர். 

இவர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் மாநில போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி மற்றும் முதல் மந்திரி மம்தா பானர்ஜியிடம், மாநிலத்தில் நிலவும் நிலைமை குறித்து முழு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்டது.

இதைதொடர்ந்து, மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனித்தனியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். பதற்றம் நிறைந்த பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள், மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை மந்திரியிடம் உரிய விளக்கம் அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com