நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்: பாபா முத்திரையை காட்டி ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்னிலையில் பேசியபோது, நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என பாபா முத்திரையை காட்டி அறிவித்துள்ளார்.
நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்: பாபா முத்திரையை காட்டி ரஜினி பேச்சு
Published on

சென்னை:

தமிழக அரசியலில் களமிறங்குவதை அதிகாரப்பூர்வமாக, தனக்கே உரிய ஸ்டைலில் ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தமிழக அரசியல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவை அறிவித்துள்ள ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி, கொள்கை, தனது தாரக மந்திரம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்.

ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் அரசியல் அறிவிப்பை அறிவித்த ரஜினிகாந்த் பேசியதாவது:-

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கு, எதையும் செய்ய முயற்சிக்காதது எனக்கு குற்ற உணர்வு சாகும் வரை இருக்கும். அரசியல் ரொம்ப கெட்டு போயுள்ளதால் அனைத்தையும் மாற்ற வேண்டும் எல்லாவற்றையம் மாற்ற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. ஆன்மிக வழியில் அரசியலை கொண்டு வர வேண்டும். ஜனநாயகம் சீர்கெட்டு போயுள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் நம்மை தலை குனிய வைத்துள்ளது. வெளி மாநில மக்கள் நம்மை பார்த்து சிரிக்கின்றனர். சிஸ்டம் ரொம்ப கெட்டுப்போயுள்ளது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம்.

உண்மையான, சாதி, மதம் பேதமில்லாமல் ஆன்மிக அரசியலை கொண்டு வர வேண்டும். இதுவே என் விருப்பம். இதை தனி ஒருவனாக செய்ய முடியாது. இது சாதாரண விஷயம் கிடையாது. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வேண்டும். ஆண்டவன் அருள், மக்கள் நம்பிக்கை, அபிமானம், ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். ஆன்டவன் அருள், மக்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

பழைய காலங்களில் ராஜாக்கள் யுத்தம் செய்து, எதிர்நாட்டு கஜானாக்களை கொள்ளையடிப்பர், படை தலைவர்கள் எதிர் நாட்டை கொள்ளையடிப்பர். இந்த காலத்தில் ஆட்சிக்கு வந்த கட்சிகள் சொந்த நாட்டில், சொந்த பூமியில் கொள்ளையடிக்கின்றன.

கட்சியை துவங்க தொண்டர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நான் தொண்டர்கள் என சொல்ல மாட்டேன். எனக்கு தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்கள் உழைப்போடு ஆட்சி செய்யும் போது அனைத்து சலுகைகளும் அனைவருக்கும் கிடைக்க வழி செய்வர்.

சுயநலம் இல்லாமல், மற்றவர் தயவின்றி பணியாற்றும் காவலர்கள் வேண்டும். யார் தப்பு செய்தாலும், அவரை தட்டி கேட்கும் காவலர்கள் வேண்டும், காவலர்களை கண்கானிக்கும் பிரதிநிதி நான். இதற்கு காவலர் படை வேண்டும், அதனை உருவாக்க வேண்டும். கிராமம் முதல் நகரங்கள் வரை பதிவு செய்த மன்றங்கள் இருக்கின்றன. இதேபோன்று பதிவு செய்யாத ஆயிரம் மன்றங்கள் உள்ளன.

அவ்வாறு பதிவு செய்யாத மன்றங்களை பதிவு செய்து பொது மக்களை ஒன்றிணைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு தெருக்களிலும் நமது மன்றங்கள் உருவாக வேண்டும். அனைவரையும் ஒன்றிணைக்கும் வரை அரசியல் விமர்சனம் வேண்டாம்.

படையை தயார் செய்வோம். சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சியை ஆரம்பித்து மக்கள் மத்தியில் நாம் செய்ய இருக்கும் பணிகள், செயல்திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும். சொன்னதை செய்யாவிட்டால் மூன்று வருடத்தில் ஆட்சியை ராஜினாமா செய்வோம்.

எனது தாரக மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. எனது கொள்கை நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் நமது படையும் இருக்கும்.

இவ்வாறு ரஜினி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com