ராஜாக்கமங்கலத்தில் பிரபல கொள்ளையன் கைது

ராஜாக்கமங்கலத்தில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் கணபதிபுரம் தெக்கூரைச் சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று முருகன் ஊருக்கு வந்திருந்தார். குடும்பத்துடன் மகனின் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தனர். வீட்டிற்கு இரவு திரும்பி வந்தபோது, மர்மநபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இது குறித்து முருகன், ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராஜாக்கமங்கலம் கணபதிபுரத்தைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பது தெரிய வந்தது.

போலீசார் தேடுவதை அறிந்த அரவிந்த் தலைமறைவாகி விட்டார். வள்ளியூரில் மனைவி வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரவிந்த்திடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் போலீஸ்காரர் முருகன் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.

மேலும் சூரப்பள்ளம் அருகே மஞ்சாடி அம்மன் கோவிலில் சாமி கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை திருடியதாகவும் தெரிவித்தார். பூவன் குடியிருப்பு பகுதியில் பேராசிரியர் மனைவியிடம் 15 பவுன் நகையை பறித்ததாகவும் கூறி உள்ளார். மேலும் ஈத்தாமொழி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் பிரபு என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அரவிந்த்திடம் இருந்து 23½ பவுன் நகைகளை மீட்டனர். அரவிந்த்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் மீது ஏற்கனவே சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கு ஒன்று உள்ளது தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com