

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் 44 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், காரிய கமிட்டி இதனை ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மறுத்து விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என்றும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு வழங்குவது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.