அன்னிய நேரடி முதலீடு விதிமுறையில் அதிரடி திருத்தம் - மத்திய அரசுக்கு ராகுல் நன்றி

அன்னிய நேரடி முதலீடு விதிமுறையில் மத்திய அரசு அதிரடியாக திருத்தம் கொண்டு வந்த மோடி அரசின் நடவடிக்கைக்கு, ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதாரம் பெரும்பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. பல நாடுகளிலும் நிறுவனங்கள் நலிவுற்று, வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. இதுகுறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருக்கின்றன.

இதை பயன்படுத்தி, ஐரோப்பிய நாடுகளில் நலிவடைந்து உள்ள நிறுவனங்களின் பங்குகள் மீது சீன முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் இந்தியாவில் நலிவடைந்துள்ள நிறுவனங்கள் மீதும் சீன முதலீட்டாளர்களின் பார்வை திரும்பும் நிலை உருவானது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இதில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கிற வகையில் சில தினங்களுக்கு முன்பாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகிற நிலையில், அதை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்தும் முயற்சி நேரிடாத வகையில், மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இது மட்டுமின்றி, தேசிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய கார்பரேட் நிறுவனங்கள் மீது அன்னிய சக்திகள், கை வைப்பதை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அன்னிய நேரடி முதலீடு விதிமுறையில், மோடி அரசு நேற்று அதிரடியாக ஒரு திருத்தத்தை செய்தது. அதன்படி, அன்னிய நேரடி முதலீடுகளில் சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதை கட்டாயம் ஆக்கி உள்ளது.

இதையொட்டி மத்திய அரசின் உள்நாட்டு தொழில், வர்த்தக ஊக்குவிப்பு துறை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் எந்த ஒரு நாட்டின் நிறுவனமும், இந்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் இங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும்” என கூறப்பட்டுள்ளது.

இதுவரை “முதலீடு செய்யலாம்” என்று இருந்த விதியை “இந்திய அரசின் ஒப்புதலைப்பெற்றுத்தான் முதலீடு செய்ய முடியும்” என்று இப்போது மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் தற்போது இருக்கிற அல்லது எதிர்காலத்தில் செய்யக்கூடிய அன்னிய நேரடி முதலீடு மூலம் நிறுவனத்தின் உரிமையை மாற்றிக்கொள்வதற்கும் இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள், இந்திய நிறுவனங்களை கையகப்படுத்த சீன நிறுவனங்கள் நினைத்தாலும், அதற்கு தடைச்சுவராக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னிய நேரடி முதலீடு விதிமுறையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப்பெற வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி இருக்கிறார்கள். இந்த திருத்தம் செய்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி” என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com