வெளிநாட்டு மண்ணில் ஹீரோ என்பதை நிரூபித்து காட்டிய ரகானே

முதல் ஒருநாள் போட்டியில் இடம்பிடித்து, வெளிநாட்டு மண்ணில் நான் எப்போதுமே சிறந்த வீரர்தான் எனபதை ரகானே நிரூபித்து காட்டியுள்ளார். #SAvIND #Rahane
வெளிநாட்டு மண்ணில் ஹீரோ என்பதை நிரூபித்து காட்டிய ரகானே
Published on

சமீப காலமாக ஒருநாள் போட்டியில் இருந்து ரகானே ஓரங்கட்டப்பட்டார். ரகானேவை நாங்கள் தொடக்க வீரராக பார்க்கிறோம். தவான், ரோகித் சர்மா ஆகியோரில் ஒருவர் விளையாடவில்லை என்றால், ரகானே தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறினார். மேலும், இது நிர்வாகத்தின் முடிவு. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.

இதனால் கடந்த ஒரு வருடத்திற்குப் மேலாக ரகானேவிற்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தாலும் தொக்க வீரராக மட்டுமே களம் இறக்கப்பட்டார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட களம் இறக்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் திறமையாக விளையாடுவார் என்ற நிலையிலும், நி்ர்வாகத்தின் கொள்கை முடிவால் ரகானே ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்னர் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. அப்போது ரோகித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினார். இந்த தொடர் சதம் அடித்ததுடன் தொடர் நாயகன் விருது பெற்ற அசத்தினார். பின்னர் இலங்கைத் தொடரின்போது ரகானேவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக சொந்த மண்ணில் விளையாடியதால் ரகானே பற்றி அணி நிர்வாகம் பெரிய அளிவில் கருத்தில் கொள்ளவில்லை.

தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக இந்தியா இலங்கையுடன் விளையாடியது. அப்போது டெஸ்ட் தொடரில் ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒருநாள் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். அப்போதும் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. அணியில் தனக்கு எப்படியும் இடம் கிடைக்கும் என ரகானே அதிக நம்பிக்கையில் இருந்தார்.

இந்தியா உள்ளூர் தொடர்களை முடித்துக் கொண்டு முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் தாயர் செய்யப்பட்டிருந்தது. இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

முதல் இரண்டு டெஸ்டிலும் ரகானே களம் இறக்கப்படவில்லை. இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் ரோகித் சர்மாவை களம் இறக்கியது சரிதான் என்று நிர்வாகம் கூறியது. ஆனால், 3-வது டெஸ்டில் ரோகித் சர்மா நீக்கப்பட்டு ரகானே சேர்க்கப்பட்டார். ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற கடைசி டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 48 ரன்கள் எடுத்து அசத்தினார்.

கடினமாக ஆடுகளத்தில் 48 ரன்கள் அடித்த ரகானேவிற்கு பாராட்டு குவிந்தது. மேலும், ரகானேவிற்கு ஆதரவான கருத்து மேலோங்கியது. இதனால் ஒருநாள் போட்டிக்கான அணியில் தொடக்க வீரராகத்தான் களம் இறக்குவோம் என்ற நிர்வாத்தின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா தொடர்ந்து வெளிநாட்டு மண்ணில் விளையாட வேண்டியுள்ளது. அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதனால் 50 ஓவரும் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டும். இதனால் ரகானேதான் 4-வது இடத்திற்கு சரியான நபர் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

இதனால் இன்றைய தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரகானே இடம்பிடித்துள்ளார். ரகானே கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கினார். அதன்பின் தற்போதுதான் ஒருநாள் போட்டியில் களம் இறங்குகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com