

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பிய சொகுசு காரை மோதவிட்டு பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இவர்களில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரி மேல தெருவை சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணியன் (வயது30) வீரமரணம் அடைந்தார். சுப்பிரமணியன் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரராக பணியாற்றினார். இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சுப்பிரமணியன் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர் கடந்த 10-ந்தேதி காலையில் மீண்டும் பணிக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ஸ்ரீநகர் சென்று மீண்டும் பணியில் சேர்ந்ததாக தன்னுடைய மனைவியிடம் செல்போனில் தெரிவித்தார்.
இந்த நிலையில் பயங்கரவாதி நடத்திய திடீர் தாக்குதலில் சகவீரர்களுடன் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் சவலாப்பேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.
வீரமரணமடைந்த சுப்பிரமணியன் உடல் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் அவரது சொந்த ஊரான சவலாப்பேரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அவருக்கு சொந்தமான இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகளும் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.