தினகரன் தான், இனி தமிழகத்தின் எதிர்காலம் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்: புகழேந்தி

டி.டி.வி. தினகரன்தான் இனி தமிழகத்தின் எதிர்காலம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அவரைத்தான் மக்கள் விரும்புகிறார்கள், வரவேற்கிறார்கள் என புகழேந்தி கூறினார்.
ஓசூர் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக புகழேந்தி வந்த காட்சி.
ஓசூர் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக புகழேந்தி வந்த காட்சி.
Published on

ஓசூர்:

நீட் தேர்வு தொடர்பாக துண்டு பிரசுரம் விநியோகித்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள தினகரன் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில் ஓசூர் நீதிமன்றத்தில் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது:-

இஸ்லாமியர்களின், முத்தலாக் என்ற கொள்கைப் பிடிப்பினை, அவர்களது கருத்துகளை கேட்காமல், கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு முடிவு செய்துள்ளது தவறானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று டி.டி.வி. தினகரன் துணிச்சலாக தனது கருத்தை கூறியுள்ளார்.

நேற்று கூடிய தமிழக அமைச்சர்கள் கூட்டத்தில் யாரும் இது குறித்து எதுவும் பேசவில்லை, ஒரு தீர்மானம் கொண்டு வரவும் அவர்கள் நினைக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சிறுபான்மை சமுதாயத்தினரை போற்றி பாதுகாத்தனர், கண்ணை காப்பது போல் காத்தார்கள்.

அரசியல் விமர்சகர் குருமூர்த்தி சொன்ன கீழ்த்தரமான வார்த்தைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரால் இதுவரை பதிலும் சொல்ல முடியவில்லை, அவரை மன்னிப்பு கேட்க வைக்கவும் முடியவில்லை. குருமூர்த்தியை எதிர்கொள்ள முடியாத, கையாலாகாத அரசாக, இந்த அரசு உள்ளது. ஜெயலலிதா இன்று இருந்திருந்தால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழந்ததை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

இன்று மாபெரும் தலைவராக விளங்கும், டி.டி.வி. தினகரன்தான் இனி தமிழகத்தின் எதிர்காலம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அவரைத்தான் மக்கள் விரும்புகிறார்கள், வரவேற்கிறார்கள். ஒரு தினகரனாலே, ஆட்சியாளர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் கூட அவரை பற்றி தான் பேசுகிறார்கள். எடப்பாடி தலைமையில் கப்பல் மூழ்கி கொண்டிருக்கிறது. அதிலிருந்து நாங்கள் வெளியே வந்து விட்டோம். டி.டி.வி. தினகரன் சட்டமன்றத்திற்குள் நுழைந்ததும், காட்சிகள் மாறும், மற்றவர்களும் எங்கள் அணிக்கு வந்து விடுவார்கள். எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ் ஆகிய தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டு 68-வயதிற்குள்ளாகவே சாதனை புரிந்து விட்டனர். ஆனால், ரஜினிகாந்த் 68 வயதிற்கு மேல் அரசியலுக்கு வந்து என்ன செய்வார்? என்பதை வேடிக்கை பார்க்க வேண்டும்.

இவ்வாறு புகழேந்தி நிருபர்களிடம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com