

சுயநினைவின்றி கிடந்த சிபானா பர்வீனை பெற்றோர் மீட்டு அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிபானா பர்வீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். இவரது மகள் சிபானா பர்வீன் (வயது26) பல் டாக்டர்.
இவரும் புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான பட்டானுாரை சேர்ந்த நாகலிங்கம் என்பவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் 70 பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 லட்சம் சீர்வரிசை பொருட்களை நாகலிங்கத்திற்கு கொடுத்தனர்.
இந்நிலையில், நாகலிங்கம் அடிக்கடி காரைக்காலுக்கு சென்று வந்ததால், சந்தேகமடைந்த சிபானா பர்வீன் தனது கணவரிடம் கேட்டதற்கு, தொழில் விஷயமாக சென்று வருவதாக கூறினார்.
ஆனாலும் தொடர்ந்து அவர் காரைக்காலுக்கு சென்று வந்ததால் அவரை பற்றி சிபானா பர்வீன் விசாரித்தார். அப்போது நாகலிங்கம், ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் காரைக்காலில் இருப்பது தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த சிபானா பர்வீன் தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் மனஉளைச்சலில் இருந்து வந்த சிபானா பர்வீன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். இதனால் சுயநினைவின்றி கிடந்த சிபானா பர்வீனை பெற்றோர் மீட்டு அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிபானா பர்வீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை அப்துல் அஜிஸ் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.